இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்ற சந்தேகத்துடனேதான் ஞாயிறன்று ஃப்ரிஸ்கோ நூலகத்தில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள புறப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கம் இருந்தும், முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாததும், கடந்த சில வருடங்களாக ஜெயமோகன் வலைத்தளத்தை தவிர தமிழில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டதும் எனக்கு தயக்கத்தை உருவாக்கியது. நண்பர் செந்தில் அழைத்தபோது, “ஒருமுறை சென்று பார்த்துவிடலாமே” என்ற எண்ணத்துடன் அவரிடம் வருகிறேன் என சொன்னேன். அவர் என்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்ததும், பிரதீப் அவர்கள் அழைத்து கதைகளுக்கான சுட்டிகளை பகிர்ந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியது.


வாசிக்க வேண்டிய நான்கு கதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

  • அசோகமித்திரனின் ‘காந்தி’ மற்றும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’
  • அ. முத்துலிங்கத்தின் ‘கடவுச்சொல்’ மற்றும் ‘ஒரு சாதம்’

சந்திப்பிற்கு நான்கு நாட்களே இருந்ததால், தினமும் இரவில் ஒரு கதை என்று முடிவெடுத்தேன்.
என் மனதிற்கு நெருக்கமானவர் முத்துலிங்கம் என்பதாலும், அவருடைய பல கதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததாலும் கடவுச்சொல் கதையிலிருந்து தொடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வாசிப்பதைப் பார்த்து என் மனைவிக்கும் மகனுக்கும் ஆச்சரியம்!
அ.முத்துலிங்கத்தின் இரண்டு கதைகளும் எளிதாக வந்தது. வாசித்த பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதும் பழைய பழக்கத்தையும் மீட்டெடுத்தேன்.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும் போதே “புரிகிற மாதிரி, புரியாத மாதிரி” என்ற மனநிலை. “சந்திப்பில் கேட்டு விளக்கமெடுத்துக்கொள்வோம்” என்று விட்டுவிட்டேன்.


ஞாயிறு காலை 9 மணிக்கு நிகழ்ச்சி. 8:55-க்கு ஃப்ரிஸ்கோ நூலகத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே வாசகர் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். நூலகம் திறந்ததும் நாங்கள் எட்டு பேர் ஒரு குழுவாக உள்ளே சென்றோம். வெங்கட் பின்னர் இணைந்து கொண்டார்.
அன்னபூரணா அவர்கள் விநாயகரை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.


கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்

‘காந்தி’ பற்றி முதலில் விவாதம் நடைபெற்றது. பாலாஜி அவர்கள், அசோகமித்திரனின் எழுத்து “writer’s writer” எனக் குறிப்பிட்டு, பல அடுக்குகள் கொண்ட எழுத்துமுறையை விளக்கினார். மூர்த்தி மற்றும் பிரதீப், காந்தியின் பல பரிணாமங்களைப் பற்றியும், அவர் இன்றும் பேசப்படும் ஒருவராக இருக்கின்ற நிலைப்பாட்டையும் விவாதித்தனர். செந்தில், கசப்பும் கனிவும் கதையின் உள் நயமாக இருப்பதை வெளிப்படுத்தினார். நான் தவறாக புரிந்திருந்த ஒரு வரியை, மூர்த்தி தெளிவாக்கினார். பாலாஜி, ஜெமோவின் ‘இன்றைய காந்தி’ கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ எனக்கு சற்று பிடிபடாமல் இருந்த கதை. ஆனால் செந்தில், ஐந்து குழந்தைகளை ஐம்புலன்கள், அல்லது பஞ்சபூதங்களாகலாம் என ஒரு புதிய பார்வையை வழங்கினார். மூர்த்தி, நடுத்தர வர்க்க மனநிலையை கதையின் வழியே விவரித்தார். பிரதீப், கதையின் ஒரு காட்சியை தேவதையின் தேடல் என ஓவியப்படுத்தினார்.

‘ஒரு சாதம்’ கதையை, ராதா அவர்கள் நினைவில் இருந்து ழுமையாகச் சொன்னது பிரமிப்பாக இருந்தது.ஒரு சதம் என்பது சிவலிங்கம் கடுமையான உழைப்பு, நேர்மை, புத்திக்கூர்மையால் முன்னுக்கு வரும் ஒரு சதம் பேரில் ஒருவன் என்ற perspective நான் முற்றிலும் எதிர்பாராதது. 

கடைசியாக, ‘கடவுச்சொல்’ . ஏன் கடவுச்சொல் என்ற தலைப்பு என்பதில் ஆரம்பித்து, எப்படி அது ஆப்ரஹாமின் பாவமன்னிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்றது. வெங்கட் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக தன் பாட்டியை நினைவூட்டியதை பகிர்ந்து கொண்டார்.


என்ன கற்றுக்கொண்டேன்?

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்காவிட்டால், இத்தனை புதிய perspectives தெரிந்துக்கொள்ளாமலேயே போயிருப்பேன்! உண்மையில் இவர்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்குள்ளே ஆச்சர்யமும், பிரமிப்புமே மேலிட்டது. அபாரமான ஞாபக சக்தியும், செறிவான மற்றும் தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் கொண்ட நண்பர்கள் சூழ இரண்டு மணிநேரம் செலவிட்டது ஒரு புதிய அனுபவம்.

இவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம் அவர்கள் ஒரு சிறுகதையை கிட்டதட்ட மாடர்ன் ஆர்ட் போல பார்க்கும் விதம். மாடர்ன் ஆர்ட்டில் எப்படி ஒவ்வொரு தூரிகை தீற்றலுக்கும், வண்ணங்களுக்கும் உள் அர்த்தம் இருக்ககூடுமோ அதைப் போல கதைக்குள்ளும் இருக்கும், இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து பார்க்கின்றனர். அறிமுகமோ பயிற்சியோ இன்றி மாடர்ன் ஆர்ட்டை ரசிக்க முடியாது அதைப்போல அவர்கள் அனைவருக்கும் வாசிப்பில் பயிற்சி இருந்ததாகவே எனக்குப்பட்டது. என் வாசிப்பு முறை ரவிவர்மா ஓவியத்தை ரசிப்பது போல. சகுந்தலா, துஷ்யந்தன் வருகிறானா என்று திரும்பி பார்க்கிறாள் என்ற அளவில் ரவிவர்மா ஓவியத்தை பார்க்க, ரசிக்க, அனுபவிக்கத் தெரியும். ஆனால், இந்த நண்பர்கள் ஒரு படி மேலே போய் காளிதாசனின் சாகுந்தலத்தில் இருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் என்று தோன்றியது.


நன்றிகள்

  • செந்திலுக்கு, இந்த வாசகர் வட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்
  • பிரதீப்பிற்கு, கதைகள் அனுப்பி, கலந்துரையாடலுக்கு வழிவகுத்ததற்கும்
  • மற்றும்
  • இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு.