சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து.
ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும் புகைப்படங்களுடன் சேர்த்து வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம்.
அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன்.
சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.
பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார்.
அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன்.
உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
