“Work from home” சொகுசு மெல்ல மறைந்து, மீண்டும் அலுவலகம் செல்வது இயல்பாகிக் கொண்டிருப்பதால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணத்தில் கழிக்க வேண்டிய கட்டாயம். பயண நேரத்தில் பாட்காஸ்ட் கேட்பது பழக்கம். பெரும்பாலும் எகனாமிக்ஸ் அல்லது வரலாறு, சில நேரங்களில் நாட்டு நடப்புகள். சமீபத்தில் ஜெமோ தளத்தில் அவரின் unified wisdom பேச்சுக்கள் Spotifyயிலும் வெளியிடுகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பரவாயில்லையே, இனி பயண நேரத்தில் ஜெமோவைக் கேட்போம் என்று சில நாட்களாக அவரின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இன்று அவர் பேசிய தலைப்பு ‘இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை’. https://open.spotify.com/episode/6hZm1v6Tltjo8rRitOHKfw?si=fk3fWyB6SK6XOR__e5YgFQ. அடுத்த தலைமுறை எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் பார்த்த அனுபவமுள்ள யாரும் இதை எளிதாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது வேறு ஒன்று.
unified wisdom நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு வர சிலர் கேட்ட luxuries. அடப் பாவிகளா, இப்படி எல்லாம் கூட இருக்கிறார்களா என நிஜமாகவே திகைப்பை ஏற்படுத்தியது! இத்தனை பொன்னான வாய்ப்புகள் வாசலில் வந்து கதவைத் தட்டும் போது கூட அதன் அருமை தெரியாது இருக்கிறார்கள் என்பது பெரும் ஏமாற்றமே.
அதிலும் ஓரிருவர் பெங்களூர்/டெல்லி போன்ற பெரிய நகரங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கவனியுங்கள், கலந்து கொள்ள, கற்றுக் கொடுக்க அல்ல, வருவதற்கு அமைப்பாளர்களிடமே பயணப்படி கேட்டார்கள் என்று அவர் சொன்ன போது இந்தப் பதர்கள் எத்தனை மண்டைக்கனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. கார்ப்பொரேட் ட்ரெயினிங் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல. ஞானத்தை, அறிவை வழங்குகிறேன் என ஒருவர் அழைத்தால், அதற்கு பயணப்படி கேட்பேன் என ஒருவன் கூறுவானேல், அவனை மடையன் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?!
ஜெமோவை படிப்பவர்கள், பின் தொடர்பவர்கள் எப்படி இருப்பார்கள் என மனதில் ஒரு பிம்பம் இருந்தது – பண்பட்டவர்கள், செயல்திறம் கொண்டவர்கள், நல்ல ரசனையுள்ளவர்கள் என. நானறிந்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான். ‘Classy’ என்று சொல்லத்தக்கவர்கள். ஆனால், இன்றைய பாட்காஸ்ட் கேட்டபின் மேற்கூறிய எந்த குணாதிசயங்களும் இல்லாதவர்களும் ஜெமோவை பின் தொடர்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு உள்மனம் உறுத்தாதா? பெங்களூரிலிருந்து ஈரோடுக்கு டாக்ஸியில்தான் வருவேன், 20000 பயணப்படி கொடுக்க முடியுமா என்று கேட்டவனை எந்த categoryயில் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!