அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.
சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.
கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.
கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.
Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.
கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.
இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.
அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!
‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!
