சமீபத்தில் ஒரு அவசர வேலையாக, கடை மூடப்போகும் கடைசி நேரத்தில் காஸ்ட்கோவிற்கு செல்ல வேண்டியிருந்தது.அவசரமாக வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு, செக்-அவுட் கவுண்டரில் வரிசையில் நின்றேன். என் முன்னால் நின்றிருந்த ஒருவரின் கார்ட்(cart) முழுக்க நிரம்பியிருந்தது. கவுண்டரில் இருந்தவர் வயதான கேஷியர்; நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்து சோர்வடைந்திருந்தார். மேலும், அவரின் ஷிப்ட் முடியும் நேரம் என்பதால் முகத்தில் அந்த சோர்வு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வரிசையில் நின்றிருந்த அந்த நபருக்கு, “கொஞ்சமாவதுஉதவலாமே, சிலபொருளையாவதுஎடுத்து வைக்கலாமே” என்ற சிந்தனை கூட வரவில்லை. எல்லாவற்றையும் அந்த வயதான கேஷியர் தனியாகச் செய்யட்டும் என்கிற மாதிரி அப்படியே சும்மா பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.
அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஒரு சிறிய உதவியைக் கூட செய்ய விருப்பமில்லாத இந்த மனிதர், வீட்டில் எப்படிப்பட்டவராக இருப்பார்? தன் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாரிடம் எவ்வளவு சுமையை போட்டிருப்பார்? இப்படிப் பொது இடத்தில் கூட சுயநலம் காட்டுகிறவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கருணையற்றவராக இருக்கக் கூடும்?
சில நேரங்களில் இப்படிப்பட்ட சாதாரணமான தருணங்களில்தான் ஒருவரின் உண்மையான மனிதநேயம் அல்லது சுயநலம் தெளிவாக வெளிப்படுகிறது. நல்லவேளையாக என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலும் கருணையாளர்களையே சந்தித்து இருக்கிறேன்.
நான் முதல் முறை அமெரிக்கா வந்தபோது மில்வாக்கி என்ற ஊரில் நடந்த சம்பவம். வந்த இரண்டாவது நாளில், போன் சார்ஜர் பழுதாகிப் போகவே, வேறு சார்ஜர் வாங்க பக்கத்தில் இருந்த ரேடியோஷாக் கடைக்கு அறை நண்பனுடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க, ரேடியோஷாக் மிகப் பிரபலம். கடைக்கு வெளியே, ஒரு முதிய வெள்ளையர் ஏதோ உபகரணங்களை மாட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் கடையில் இருந்து வெளியே வந்த போது தான் தெரிந்தது அது டெலஸ்கோப் என்று. ஆர்வமுடன் நாங்கள் பார்ப்பதை கவனித்த அவர், ‘நிலவைப் பக்கத்தில் பார்த்திருக்கிறீர்களா? வந்து பாருங்கள்’ என்றழைக்கவே, முதல் முறையாக டெலஸ்கோப் மூலமாக நிலவைப் பார்த்து வாயடைத்துப் போனேன். நிலவின் மலைப் பரப்புகள், க்ரேட்டர்ஸ் என இதுவரை கண்டிராத நிலவை அன்று பெயர் கூடத் தெரியாத அந்த அமெரிக்கர் காட்டினார். இப்போது யோசித்துப் பார்க்கும் போது, முற்றிலும் அந்நியர்களாகிய எங்களை அன்று அவருடைய விலை உயர்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்து அழைத்தது அவரின் பெருந்தன்மையும், சக மனிதர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அல்லவா. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் கூட அந்த பெயர் தெரியாத அந்த முதிய அமெரிக்கரின் முகமும் அந்த சம்பவமும் நினைவில் இருக்கிறது. (அதன் பின்னே டெலஸ்கோப் பித்துப் பிடித்து, இந்தியா திரும்பும் போது நானும் ஒரு டெலஸ்கோப் வாங்கிக் கொண்டு போனது தனிக்கதை.)
திருமணமான சில மாதங்களில் நாங்கள் சிகாகோவில் இருந்தோம். அப்போது குறுகிய கால ப்ராஜக்ட் என்பதால், எப்போது வேண்டுமானலும் திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்ததால், முடிந்தவரை அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாம் என்று அக்டோபர் மாதத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றிருந்தோம். அது ஆஃப் சீசன் என்றோ, அந்த நேரத்தில் நயாகராவில் கிட்டத்தட்ட எல்லாமே மூடப்பட்டிருக்கும் என்றோ எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மதிய உணவிற்காக, கூகுளில் தேடிப் பார்த்த போது, பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி ஹோட்டலைக் காண்பிக்க, நாங்களும் உள்ளே சென்று விட்டோம். உள்ளே நுழைந்த பின்தான் தெரிந்தது, ஆஃப் சீசன் என்பதால் அந்த ஹோட்டல் அப்போது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதிய உணவு நேரத்தில் சென்றதால், அந்த ஹோட்டலின் ஒரு பகுதியிலேயே குடியிருந்த அந்த ஹோட்டலின் உரிமையாளர் குடும்பத்தினர் அவர்களுக்காக சமைத்திருந்த உணவை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாததது. அதன் பின்பு பஞ்சாபிகள் மீதான என் மதிப்பு பல மடங்கு கூடிப் போனது. “பகிர்ந்து உண்டு உண்” என்பதற்கு ஈடான பதம் பஞ்சாபியில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் அன்று அவர்கள் செய்தது அதைத்தானே! முன்பின் தெரியாதவர்களிடம் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் எத்தனை கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கோர்டன் ஹென்றியை நாங்கள் சந்திக்கும் போது அவருக்கு வயது 70களில் இருந்திருக்கலாம். கைத்தடியுடன் தான் வாக்கிங் வருவார். ஆனால் கைத்தடி நடப்பதற்காக அல்ல, பாம்பு போன்ற ஜந்துகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று புன்னகையோடு சமாளிப்பார். அப்போது நாங்கள் ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்தோம். மாலை நேரங்களில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங் செல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் அங்கு வாக்கிங் செல்பவர்கள் குறைவு. அதுவும் வார நாட்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஆட்கள் இருப்பார்கள். அப்படி ஒரு வார நாளில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங் செல்லும் போது தான் கோர்டன் ஹென்றியை சந்தித்தோம். தன் கைத்தடியை மோனோபோட் போலப் பயன்படுத்தி அன்று அவர் ஒரு பறவையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். போட்டோகிராஃபி மற்றும் பறவைப் பார்த்தல் இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் அவர் ஃபோட்டோ எடுத்த பறவையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவர் போல அவர் முன்னகர்ந்து அவர் எடுத்த அந்த பறவையின் புகைப்படத்தை சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடு எங்களிடம் காண்பித்தார். சில மனிதர்களைப் பார்த்த உடனேயே சினேகப்பூர்வமாக உணர்வோமே, அப்படிப்பட்டவர் கோர்டன். அன்று ஆரம்பித்த அவருடைய நட்பு ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு மாறிச் சென்ற பின்பும் தொடர்ந்தது. கேமரா பற்றி, பறவைகள் பற்றி, எப்படி அந்த வயதிலும் தளராமல் தினமும் வாக்கிங் செல்லும் அவரின் உறுதி என அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம் ஆனால் மிக முக்கியமானது அவர் முற்றிலும் அந்நியர்களை கூட மனித நேயத்தோடு பார்க்கும் விதம். அவரது கருணையும், எளிமையும், சின்ன சின்ன விஷயங்கள் கூட வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள். நான் யோசித்ததுண்டு – கோர்டனின் இடத்தில் நாம் இருந்தால் அந்த வயதில் அவரைப் போல முன்பின் தெரியாத யாரோ ஒருவரிடம் கேமராவை காண்பித்து பேசிக் கொண்டிருக்கவோ, நட்பு பாரட்டவோ முடியுமா என்று. அசாதரணமான மனித நேயமன்றி அது சாத்தியமேயில்லை.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. அற்ப விஷயங்கள் என்று நாம் நினைக்கும் சில, அடுத்தவர்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவரோ, கடைகளில் பில் போடுபவரோ, ஸ்கூல் கிராஸிங் கார்டோ, இப்படி முன் பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம். கடைசியாக நீங்கள் ஒரு முற்றிலும் அந்நிய மனிதரிடம் கருணையோடோ, அன்போடோ எப்போது நடந்து கொண்டீர்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கீர்களா?












