மலை சார்ந்த நினைவுகள்

குழந்தைகளிடம் இயற்கை காட்சி  எதையாவது படம் வரையச் சொன்னால், பெரும்பாலான குழந்தைகள் மலை சார்ந்த ஏதோ ஒன்றைத் தான் எப்போதும் வரைவதை கவனித்திருக்கீர்களா? மலையை நேரில் பார்த்திராதா குழந்தைகளின் மனதில் கூட மலை என்ற பிம்பம் எப்படியோ பதிவாகி இருப்பது ஆச்சரியம் தான்.

நான் பிறந்து வளர்ந்த ஊரில், அப்போதெல்லாம் வீட்டு மொட்டை மாடியிலிருந்துப் பார்த்தால், மூன்று திசைகளிலும் மலையைப் பார்க்கும் பாக்கியம் இருந்தது. மேற்கே வேளிமலை, வடக்கே  தாடகை மலை, கிழக்கே மகேந்திரகிரி மலை. மலைகள் எனக்கு எப்போதுமே ஒரு விதமான ஆர்வமூட்டும் விஷயமாகவே இருந்து வருகிறது. மலைக்க வைப்பதானால் தான் மலை என்கிறோமா?!  

கீழே இருக்கும் படத்தில் நட்ட நடுவே இருக்கும் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும் ஊர் தான் நான் பிறந்த ஊர். ஏரியின் பெயர் தான் ஊரின் பெயரும் – புத்தேரி.

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்தோ, பேருந்து நிலையத்திலிருந்தோ இறங்கிய உடனேயே வெளியே பார்த்தால் சுற்றிலும் மலைகளைக் காணலாம். நாகர்கோவிலிலிருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல, ஏரிகள், குளங்கள், வயல்கள், இவை அனைத்துக்கும் பிண்ணனியில் மலைகள் என மிக ரம்மியமாக இருக்கும்.

பள்ளிப் பிராயத்தில் தாடகை மலை எரிமலை போல வெடிக்கப் போகிறது என்று யாரோ புண்ணியவான்  புரளியைக் கிளப்பி விட, தாடகை மலை  நிஜமாகவே வெடிக்கப் போகிறதோ என்று நானும் அண்ணனும் அவ்வப்போது தாடகை மலையை  வீட்டு மொட்டை மாடியிலிருந்து செக் செய்துக் கொண்டதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! கோடை விடுமுறை நாட்களில் வேளிமலை அடிவாரத்தை ஒட்டி ஓடும் கொரமணி ஆற்றில், இழுத்துக் கொண்டு ஓடும் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டுக் குளிப்பது, அங்கிருந்து கிழக்கு நோக்கிப் பார்த்தால், பச்சைப்பசேல் என கடல் போல் பரந்து கிடக்கும் வயல்களின் அழகை பார்த்து ரசிப்பது என அதெல்லாம் ஓரு தனி அனுபவம்.

வேளிமலை அடிவாரத்தில் தான் நான் படித்த கல்லூரி இருக்கிறது. கல்லூரி நாட்களில் பேருந்தில் பயணம் செய்யும் போது, ஜன்னலோரம் அமர்ந்து மலையை ரசித்துக்கொண்டே பயணிப்பது இன்றும் மனதில் இனிய நினைவாக இருக்கிறது. ஒரு முறை கல்லூரியை கட் அடித்து விட்டு, வேளிமலைக்கு மேல் இருக்கும் ஃபால்ஸுக்கு  நண்பர்களுடன் செல்லும் போது, பாதி வழியில் திடீரென மழை வந்து இருட்டி விடவே,  வந்த தடம் மறந்து போனது. அப்பொதெல்லாம் செல்போன் என்ற ஓன்று வந்திருக்கவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி கீழே இறங்கி வந்தோம். இன்று நினைத்துப் பார்க்கும் போது அதெல்லாம் அட்வெஞ்சர் தான்.

அடியிலிருந்து மலையைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்புற்கு பல மடங்கு பிரமிப்பு மலையின் மேலிருந்து கீழே பார்க்கும் போது ஏற்படுவது. கல்லூரி நான்காம் வருடம் ஒரு முறை நண்பர்களுடன் கோதையாறு ஹைட்ரோ பவர் பிளான்ட் பார்க்க சென்றிருந்தோம். முள்ளும் மலரும் படத்தில் பார்த்திருப்பீர்களே, அதைப் போல வின்ச்சில் மலைக்கு மேலே செல்ல வேண்டும். அங்கிருந்து கீழே பார்த்தால், breathtaking view! அவ்வளவு அழகான இடம் அங்கே இருக்கிறது என்பது சொற்ப பேருக்கு மட்டுமே தெரியும். அப்படி பாதுகாக்கப்பட்ட பகுதி. மலைகளால் சூழப்பட்ட ஒரு பொக்கிஷம் போல இருந்தது. கீழே கூகுள் சேட்டிலைட் வியூ கொடுத்து இருக்கிறேன். யோசித்துப் பாருங்கள் – மலை மேலிருந்து பார்க்கும்போது எப்படி இருந்து இருக்கும்! இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் கூட கண்ணில் அந்த காட்சி அப்படியே இருக்கிறது! 

ஒரு முறை மவுன்ட் ரெய்னியர் நேஷனல் பார்க்கிற்கு சென்றிருந்தோம். சியாட்டில் ஏர்போர்ட்டிலிருந்து  வாடகைக் காரை எடுத்துக்கொண்டு மவுன்ட் ரெய்னர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சியாட்டிலுக்கே உரிய மேக மூட்டம். மந்தமான வானிலை. கொஞ்சம்  கொஞ்சமாக மேக கூட்டங்கள் விலக, விலக, தூரத்தில் நெடிதுயரந்து ரெய்னர் மலை! கோவிலில் தரிசனத்திற்கு காத்துக் கொண்டு இருக்கும் போது திரையை விலக்கும் போது ஏற்படுமே, அப்படி ஒரு காட்சியனுபவம்! கடவுளே மலைவடிவாய் இருப்பதைப் போல. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவனாக இருந்தாலும், நான் பார்த்த மலைகளிலேயே மவுன்ட் ரெய்னர் தான்  கம்பீரமான மலை! அத்தனை உயரமாக(14410 அடி!), மணிமகுடம் போல பனி மூடி, கிட்டத்தட்ட வானைத் தொட்டுக்கொண்டு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தது போல மிகப்பெரிய மலை! மேகக்கூட்டங்களுக்கு நடுவே மவுன்ட் ரெய்னர் மலை முகடு, அந்த மலையே வானத்தில் இருப்பது போன்று அசாதாரணமாக இருந்தது. அந்தக் காட்சியை ரசிப்பதற்காவே ஒரு் எக்ஸிட் எடுத்து, அருகிலிருந்த ஒரு ஏரிக்கரையோரம் நிறுத்தி, நிதானமாக கண் குளிர பார்த்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

ராக்கி மவுன்டெய்ன் சென்றிருந்த போது முற்றிலும் எதிரான ஒரு அனுபவம். ஏதோ உந்துதலில் Old Fall River Scenic Roadல் நுழைந்து விட்டோம். ரோடு என்று அதை சொல்வதே தவறு. வெறும் மண்பாதை என்பதே சரியாக இருக்கும். பாதையின் தொடக்கத்திலேயே, இது ஒரு வழிப் பாதை, திரும்பி வர வழி கிடையாது என்று எச்சரிக்கை போர்டு வைத்திருப்பார்கள். அதாவது மலையில் ஏற ஆரம்பித்து விட்டால், பாதியில் பயந்து போய் திரும்பி வர வாய்ப்போ, வழியோ இல்லை.  முதல் 200 மீட்டர் வரைக்கும் பயமாக இருக்கவில்லை. அதற்கு மேலேப் போகப் போகத் தான் தெரிந்தது AWD இல்லாமல் அந்த பாதையில் செல்வது தற்கொலைக்குச் சமம். ஊட்டியின் ஹேர்பின் பென்டெல்லாம் ஒன்றுமே இல்லை என எண்ணும் அளவுக்கு அத்தனை குறுகலான, பெரும்பகுதி மண்ணால் ஆன பாதை. ஊட்டியிலாவது ரோட்டின் விளிம்புகளில் கல் வைத்து இருப்பார்கள். இங்கே பாதுகாப்பிற்காக எதுவுமே இருக்காது. ஒரு அடி தவறினால், மலையிலிருந்து குட்டிக்கரணம் தான்! சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ டைரக்ட் டிக்கெட் வாங்கி விடலாம். அப்படிப் பட்ட பாதையில், வெறும் Toyota Camryல், பின் சீட்டில் ஆறு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு, ஏதோ குருட்டு தைரியத்தில் ஏறி விட்டோம். ரியர் வியூ மிர்ரரில் பார்த்தால், பேயறைந்த மாதிரி பயத்தில் பின் சீட்டில் மனைவி. எனக்கோ, எப்படி ஒட்டப் போகிறோம் என்று உள்ளுக்குள்ளே உதறல். திரும்பிப் போகவும் வழியில்லை, எங்கேயும் நிறுத்தவும் முடியாது. பயத்தை வெளிக்காட்டாமல், முழுக் கவனத்துடன் கொஞ்சம் கூட அங்கே இங்கே கண் அசைக்காமல் ஒட்டி, ஓரு கட்டத்தில் இதற்கு மேலே நம் கையில் எதுவும் இல்லை என்று முடிவெடுத்து, காரில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்க விட்டு விட்டு, குல தெய்வத்தையும், மற்ற எல்லா தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒன்பது மைல் மலைப் பாதையை ஒரு வழியாக முக்கால் மணி நேரத்தில் கடந்து Alpine Visitor Centerஐ வந்தடைந்துவிட்டு அடைந்த நிம்மதி இருக்கிறதே, அதற்கு இணையே இல்லை!

நான் இப்போது இருக்கும் டாலஸ் நகரம் எவ்வளவு தட்டையானது என்றால், நான்கு திசைகளில் சுற்றிப் பார்த்தாலும் உயரமாக கண்ணுக்கு தெரிவது கட்டிடங்களாக இருக்கும் இல்லையென்றால் flyover பாலங்களாக இருக்கும்! இந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால் ‘Flat like pan cake’. அப்படியே மொழி பெயர்த்தால் ‘தோசையின் மேற்பரப்பைப் போல் ‘ தட்டையான ஊர்! கோவிடுக்குப் பின் அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் எனக்கென்னவோ அவர்களைப் பார்த்து ஒரு விதமான பரிதாபமான உணர்வே ஏற்படுகிறது. இங்கிருந்து நான்கு மணி நேரம் எந்த திசையில் பயணித்தாலும் ஒரே மாதிரியான நிலப்பரப்புக்குள்ளேயே இருப்பது போல் தோன்றும். மலையோ, கடலோ, காடோ அருகில் இல்லாத ஊரில் இருப்பவர்கள் என் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்களே! 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன், க்ராண்ட் கேன்யன் பார்த்த அனுவபத்தை விவரிக்கும் போது, கடவுளையே பார்த்தது போல இருந்தது என்று சொல்லியிருப்பார். Solitude in nature brings us closer to God என்று Emersonனும், Thoreauவும் சொல்லியிருப்பதும் அதைத்தானே!

நம் மரபில் metaphor ஆக சொல்லப்பட்ட பல விஷயங்கள் காலப் போக்கில் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளாகிப் போனது. மலைகள் தோறும் கோவில்கள் கட்டி வைத்த நம் முன்னோர்கள், சும்மா சாமி கும்பிடுவதற்காகத் தான் கட்டி வைத்தனர் என்று நினைக்கிறீர்களா? மலை ஒரு குறியீடு. இறைவனை அணுக வேண்டின், முதலில் இயற்கையை அறிய, அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதற்கு மலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் மலைகள் மேல் கோவில்கள் கட்டி வைத்தார்கள் என்றே எனக்குப்படுகிறது.

Leave a comment