ட்வோராக்கும் சிட்டுக்குருவியும்

சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, FMல் ஆன்டோனின் ட்வோராக்கின் (Antonín Dvořák) Symphony No 9.  அதில் ஒரிடத்தில்  கேட்ட உடனேயே, மனதில் பதியும் ஒரு பீஸ் – ‘ஆகா, இதே மெட்டில் தமிழில் ஒரு பாட்டு இருக்கிறதே’ என போனை எடுத்துக் குறித்து வைத்துக் கொண்டேன்(வண்டி ஓட்டிக் கொண்டே!).  FM என்பதால், அந்த சந்தர்ப்பத்தை விட்டால், மீண்டும் அதே சிம்பொனி கேட்க வாய்ப்புக் கிடைப்பது அரிது. 

வீடு வந்தவுடன் நேரே மனைவியிடம் போய், ‘தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…’ இந்த மெட்டில் அமைந்த தமிழ்ப் பாட்டு ஏதாவது ஞாபகம் வருகிறதா எனக் கேட்கஅப்படி  எதுவும் கேட்ட மாதிரி ஞாபகம் இல்லையே என மனைவி சொல்லிவிட, என் மனதுக்குள் மட்டும் அந்த மெட்டு ஓடிக் கொண்டே இருந்தது. தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…  நான் பாடுவதைக் கேட்டு என் பையனும் , எங்கள் வீட்டு நாயும் மிரண்டு போய் எனைப் பார்க்க, இனிமேல் இவர்கள் முன்னே பாடக்கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டேன்

அடுத்த நாள் எதேச்சையாக எங்கோ மனதின் மூலையிலிருந்து அந்த வார்த்தை எழுந்து வந்தது – ‘சிட்டுக்குருவி… தத்..தத்..தரதா… ‘. உடனே யூடுபில் தேடிப் பார்த்தால், முதல் பரிந்துரையிலேயே இருந்தது – “சிட்டுக்குருவி வெட்கப்படுது…’. 1985ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல். 

https://music.youtube.com/watch?v=01OLNQGKWPs

அந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு கூடவே ட்வோராக்கின் சிம்பொனியையும் சேர்த்து கேட்கும் போது வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து இளையராஜா நம் தமிழ் காதுகளுக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார் என ஆச்சர்யமாக இருந்தது.  சிலர் இது காப்பி இல்லையா என நினைக்கலாம். உண்மையில் ட்வோரோக்கின் சிம்போனியயையும், சிட்டுக்குருவி பாட்டையும் ஒன்றாக கேட்டால் தெரியும் அவர் அதிலிருந்து எடுத்திருப்பது ஒரு மிகச்சிறிய பகுதி. கர்நாடக சங்கீதத்தின் ராகங்களின் அடிப்படையில் அமைந்த எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம். அதற்காக அந்த ராகங்களை காப்பி அடித்துவிட்டார் என்று சொல்வது எத்தனை அபத்தம். அதே போல, விரல் நுனியில்  இன்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில், தான் பயின்ற வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து நம் மக்களுக்கு இது பிடிக்கும் என்று நம் ரசனைக்கு ஏற்ற மாதிரி அவர் உருமாற்றி இதைக் கொடுத்துள்ளார்.  நம்மில் எத்தனை பேருக்கு வெஸ்டர்ன் க்ளாஸிக்கோ, கர்நாடக சங்கீதமோ பரிச்சயம் அல்லது ரசிக்கத் தெரியும்? இந்த பாட்டைக் கேட்ட பின்னர், அந்த சிம்போனியே என் மனதில் ‘தத்..தத்..தரதா… தத்..தத்..தரதா…’ என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இளையராஜா அவர்களே ஓரு பேட்டியில் சொன்ன மாதிரி, இன்டர்நெட்டோ, செல்போனோ இல்லாத அந்த காலத்திலேயே மொஸார்ட்டையும், பீத்தோவனையும், பாஃக்கையும் நாமும் ரசிக்கும் அளவுக்கு நமக்குத் தெரியாமலேயே நம்மிடம் கொண்டுவந்தது சேர்த்தது அவரல்லவா! 

https://music.youtube.com/watch?v=KWQa-1HUCsQ

சிட்டுக்குருவி பாட்டில் கிட்டதட்ட பாட்டு முழுக்கவே bongos, bass guitar, drumms என அட்டகாசம் பண்ணியிருக்கிறார். ஒரிஜினலில் இருப்பதை விட கொஞ்சம் டெம்பொவையும் ஏற்றி இருப்பதால், சிம்பொனியை கேட்கும் போது நம் மனதில் எழும் உணர்விற்கும், சிட்டுக்குருவி பாட்டு  கேட்கும் போது நாம் உணர்வதும் முற்றிலும் வித்தியாசம். “தர தத் தத் தத்…” என்று தொடக்கத்தில் ஜானகியின் குரலைக்  கிட்டத்தட்ட ஒரு கருவி போல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறார். ஜானகியின் குரலின் மென்மையும், அதே நேரத்தில் கூர்மையும் கிட்டத்தட்ட புளூட்டோ, கிளாரினெட்டோ போல ஒலிக்கிறது. Overlapping போல SPB, ஜானகியின் குரலோடு இணைந்து வரும் போது  பாட்டு வேறு உயரத்திற்கு செல்கிறது. பாஸ் கிட்டார் கிட்டத்தட்ட முழுப் பாட்டுக்கும்  கூடவே வருகிறது.   

பாட்டின் முழு போக்கும் call-and-response-ஐப் போல, SPB ஒரு teasing phrase விடுவார், Janaki அதற்கு mild-ஆக பதிலளிப்பார். Orchestration அந்த conversation-ஐத் தொடர்ந்து பேசும் மூன்றாவது குரலாக மாறுகிறது. எங்கே SPB வாக்கியத்தில் consonant sharpness இருக்கிறதோ, அங்கே percussion அதை highlight செய்யும். எங்கே Janaki வார்த்தையில் vowel elongation இருக்கிறதோ, அங்கே strings அதை underline செய்யும். பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தால், வார்த்தைகளே கருவி மாதிரி ஒலிக்கத் தொடங்குகிறது. இசை, குரல், வார்த்தை – மூன்றுமே ஒன்றோடொன்று கலந்து, கலைந்து போவது  இளையராஜாவின் மாயாஜாலம் தான்.

முதல் interludeல்,  அருமையான ஒரு fluteஐ கொடுத்தவர், இரண்டாவது interludeல் முற்றிலும் western harmonyஐக் கொடுத்து, ஒரு பரிணாமத்தில் ஆரம்பித்த பாட்டை, இரண்டாம் பாதியில் இன்னொரு பரிணாமத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

பாட்டின் வரிகளை கீழே கொடுத்து இருக்கிறேன். டபிள் மீனிங் என்பதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, வார்த்தைகளை மட்டும் பாருங்கள். கிட்டதட்ட முழுவதுமே வல்லினத்திலேயே எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் இரண்டாவது எழுத்து குற்றெழுத்து. ஒரு நான்கைந்து முறை பாடி அல்லது சும்மா படித்துப் பார்த்தாலே நமக்கு  நாக்கு சுளுக்கிக் கொள்ளும் tongue twisters.  ஆனால், SPBயின் குரல் எவ்வளவு லைட்டாக, effortless ஆக ஓடுகிறது பாருங்கள்; பாட்டின் அர்த்தம் புரிந்து புன்னகைத்துக் கொண்டே பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். பொதுவாக, ஜானகியும் SPBயும் இணைந்து பாடும் போது, ஜானகியின் குரலில் ஒரு dominance இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பாட்டில் ஜானகியின் குரலில் அத்தனை மென்மை, குழைவு!

பாடல் முடிவடையும் போது, எப்படி ஆரம்பத்தில் ஜானகி குரல் மேல் SPB overlap செய்திருப்பாரோ, அதேப் போல, முடிவில் SPB குரல் மேல் ஜானகி குரல் overlap செய்வது போல பண்ணியிருப்பார்.

இந்த பாட்டைப் பற்றி இன்டர்நெட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சேகரித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  1. இளையராஜா இந்த மெட்டமைத்த பின்பு இது மிகவும் கடினமான மெட்டு, இதற்கு பாட்டு எழுதுவது கடினம் என்று சில கவிஞர்கள் முயற்சி செய்து பின்னர் பின்வாங்கிவிட்டனர்.
  2. வேறு வழியின்றி வைரமுத்துவை அழைத்து வர, அவர் சவாலான இந்த மெட்டுக்கு சவாலான பாட்டு என வேண்டுமெனவே வல்லினம் மிகுதியாக எழுதினாராம்!
  3. இவர்கள் இருவரின் சவாலை பாடும் போது அநாயசமாக கடந்து போயிருப்பார்கள் SPBயும் ஜானகியும். 
  4. இந்தப் பாட்டை கச்சேரிகளில் வெகு அபூர்வமாகவே கேட்க முடியும். கடினமான பாட்டு என்பதோடு பாடி முடித்தபின் வாய் வலிக்கும் என்பதால். 

பாட்டு நன்றாக இருக்கிறது என்பதற்காக தப்பித்தவறிக் கூட யூடூபில் இதன் வீடியோவை மட்டும் பார்த்து விடாதீர்கள். இவ்வளவு அழகான பாட்டை இதை விடக் கேவலமாக எடுக்க முடியாது என்கிற லட்சணத்தில் இருக்கிறது! ரீ ரிக்கார்டிங்கின் போது இளையராஜா எவ்வளவு நொந்து போயிருப்பார்!!!  

பாடல் வரிகள்:

“சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தத்தை தத்தித் தவழும் 

தோளைத் தொத்தித் தழுவும் 

மெத்தை யுத்தம் நிகழும்

நித்தம் இந்தத் தருணம் 

இன்பம் கொட்டித் தரணும் 

என்றும் சரணம் சரணம்

இந்தக் கட்டில் கிளிதான் 

கட்டுப்படுமே 

விட்டுத் தருமே அடடா…

மச்சக்குருவி முத்தம் தருதே 

உச்சந்தலையில் 

பித்தம் வருதே

முத்தச்சுவடு சிந்தும் உதடு 

சுற்றுப் பயணம் எங்கும் வருமே

பட்டுச் சிறகுப் பறவை 

பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

நித்தம் எச்சில் இரவு 

இன்பம் மட்டும் வரவு 

நித்தம் முத்தச் செலவு

மொட்டுக்கட்டும் அழகு 

பட்டுக் கட்டும்பொழுது 

கிட்டத் தொட்டுப்பழகு

ஆஹா..கள்ளக்கனியே 

அள்ளச் சுகமே 

வெட்கப்பறவை விட்டுத்தருமோ

மன்னன் மகிழும் 

தெப்பக் குளமும் 

செப்புக் குடமும் இவளே

அங்கம் முழுதும் தங்கப்புதையல் 

மெத்தைக்கடலில் முத்துக்குளியல்

பட்டுச்சிறகுப் பறவை 

பருவச்சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி.. 

சிட்டுக்குருவி.. 

வெட்கப்படுது.. 

வெட்கப்படுது.. 

பெட்டைக்குருவி.. 

பெட்டைக்குருவி.. 

கற்றுத்தருது..

கற்றுத்தருது..

தத்..தத்..தரதா…” 

Leave a comment